மட்டக்களப்பில் பக்திபூர்வமாக இடம்பெறும் வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலய நவராத்திரி விரத பூஜை வழிபாடுகள்.!

​மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்று வருகின்றன.  

​இவ் வருடத்திற்கான நவராத்திரி விரதமானது கடந்த (11/10/2026)ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகி, வருகின்ற (20/10/2026)ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை விஜயதசமியன்று நிறைவடையவுள்ளது.  

​ஆலயத்தின் பிரதம குருக்களின் தலைமையில் காலை வேளையிலிருந்தே விசேட வழிபாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மூலமூர்த்தியான பாலீஸ்வர பெருமானுக்கும், தாயார் பாலாம்பிகவுக்கும் பல்வேறு திரவியங்களைக் கொண்டு விசேட அபிஷேகங்கள் இடம்பெறுவதுடன், அம்பாளுக்கு விசேட மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனைகளும் காட்டப்படுகின்றன.  

​ஆலய மண்டபத்தில் பக்திப் பாடல்கள் ஒலிக்க ஆன்மீகச் சூழல் களைட்டியுள்ளது.

அடியார்கள் ஆச்சார சீலர்களாக கலாச்சார ஆடையுடன் ஆலயத்திற்கு வருகை தந்து, முப்பெரும் தேவியர்களின் அருளாசியைப் பெற்று இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருவதுடன், அடியார்கள் அனைவருக்கும் அருட்பிரசாதங்களும் வழங்கி வைக்கப்படுகின்றன.  

​ஆலயத்தின் நிர்வாக சபையினர் மற்றும் கிராமத்து அடியார்கள் இணைந்து இதற்கான சகல ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
புதியது பழையவை