மட்டக்களப்பில் மயிரிழையில் உயிர் தப்பிய மாணவர்கள்!

மட்டக்களப்பு, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி விபுலானந்தா பாடசாலையின் மதில் சுவரை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த யானைக் கூட்டத்தின் அச்சுறுத்தலில் இருந்து, அங்கு இரவுநேர வகுப்புகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

நேற்றிரவு (23.10.2026)சுமார் 8 மணியளவில், ஏறாவூர் நகர சபையின் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படும் குப்பை மேட்டுப் பகுதியை நோக்கி வந்த யானைக் கூட்டம், அருகிலுள்ள ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி விபுலானந்தா பாடசாலையின் மதில் சுவரை உடைத்துக்கொண்டு பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்து இரவுநேர வகுப்புகளில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்கள், யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியதாகப் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நகர சபையினால் நிர்வகிக்கப்படும் குப்பை மேட்டுப் பகுதியை நோக்கி யானைகள் வருவதால், அப்பகுதியிலுள்ள பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அவை தொடர்ந்து நுழைந்து, சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மாணவர்களின் உயிருக்கும் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

யானைகளால் மாணவர்களுக்கோ பொதுமக்களுக்கோ உயிராபத்து ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்பது யார்? எனச் சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் கேள்வி எழுப்பினார்.

மேலும், குப்பை மேட்டுப் பகுதியை நோக்கிப் படையெடுக்கும் யானைகள் ஏறாவூர் நகருக்குள்ளும் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் நுழைந்து மக்களைத் தாக்கினால், அதற்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் கஜேந்திரன் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் ஆகியோர், யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தனர்.

பாடசாலை மதில் சுவர் உடைக்கப்பட்டு, மாணவர்கள் உயிராபத்தை எதிர்கொண்டுள்ள இச்சம்பவம், ஏறாவூர் பகுதியில் யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அவசரத் தேவையை மீண்டும் உணர்த்தியுள்ளது.

குப்பை மேட்டை பராமரிக்கும் ஏறாவூர் நகர சபை நிர்வாகம், யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்து பாடசாலைகள், ஆலயங்கள், குடியிருப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். விடயங்களில் அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, நிரந்தரத் தீர்வொன்றை வழங்க வேண்டுமெனப் தெரிவித்தார்.
புதியது பழையவை