ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம் - பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், ஆணைப்பாம்வெளி பகுதியில் விவசாயி ஒருவருக்குச் சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் நெற்செய்கைக்கு இரசாயனக் கலவை தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், வயல் காணியில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை உடைத்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த விவசாயி யு.பி. வேனடி என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வயல் காணியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவரது நெற்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன், அவர் கணிசமான பொருளாதார இழப்பையும் எதிர்கொண்டுள்ளார்.

குறித்த வயல் காணியில் இனந்தெரியாத நபர்களால் இரசாயனக் கலவை தெளிக்கப்பட்டு நெற்பயிர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அப்பகுதியில் மண் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்பதற்கான தடயங்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த வயல் காணியில் அமைந்துள்ள மாமரம் ஒன்றின் கீழ் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலையில், அந்தச் சிலையும் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வயல் காணியைப் பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நெற்பயிர்கள் சேதப்படுத்தப்பட்டமை, பிள்ளையார் சிலை உடைத்து அகற்றப்பட்டமை மற்றும் அப்பகுதியில் இடம்பெற்றிருக்கக்கூடும் எனக் கூறப்படும் மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதியது பழையவை