அம்பாறை மாவட்டம் கல்முனை – வன்னியார் வீதிப் பகுதியில் 19 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த இருதயநாதன் அம்ரிசன் (வயது 19) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது.
குறித்த மாணவன் நேற்று(08.10.2026)நள்ளிரவு வரை பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த தனது காதலியான சக பாடசாலை மாணவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
அதன் பின்னர், தனது பணப்பையில் இருந்த காதலியின் புகைப்படத்தை அறையில் வைத்த பின்னரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த மாணவனின் தந்தையும் தாயாரும் அரச உத்தியோகத்தர்களாவர். தந்தையை 4 மாதங்களுக்கு முன்னரே இழந்த சோகத்தில் இருந்து குடும்பத்தினர் மீள்வதற்குள் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில், தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சியின் வேண்டுகோளுக்கிணங்க, திடீர் மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்றன.
சம்பவம் தொடர்பில் கல்முனைத் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
> குறிப்பு: தற்கொலை எதற்கும் முடிவல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் மேலோங்கினால், இலங்கையின் தேசிய மனநல உதவி எண்ணான 1926 ஐத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம்.