வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல் மற்றும் இலங்கையை அண்மிக்கும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி - நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை!

​நாட்டின் தற்போதைய வளிமண்டல நிலைமைகள் மற்றும் எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படும் சீரற்ற வானிலை குறித்து வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா விசேட வானிலை முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

​அதன்படி, எதிர்வரும்( 20.10.2026 )ஆம் திகதி அன்று முல்லைத்தீவுக்கு வட கிழக்கு திசையில், வடக்கு மாகாணத்தை அண்மித்து தற்காலிக வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் பரவலான மழை (23.10.2026)ஆம் திகதி வரை தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​வங்காள விரிகுடாவில் உருவாகும் புதிய புயல்.

​இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் (23.10.2026)ஆம் திகதி  அன்று மத்திய வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மேலும் வலுப்பெற்று (26.10.2026)ஆம் திகதி அன்று புயலாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

​இந்தப்புயல் மேலும் நகர்ந்து (29.10.2026)ஆம் திகதி அன்று இரவு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள ராம்பில்லி பகுதிக்கு அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(இது தற்போதைய கணிப்பீடு மட்டுமே என்பதால், இதில் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது).

​இலங்கைக்கு நேரடி பாதிப்பில்லை எனினும் கனமழைக்கு வாய்ப்பு.

​இப்புயலினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்புகள் இல்லாவிட்டாலும், நாட்டின் பல பகுதிகளுக்கும் இக்காலப்பகுதியில் கனமழை முதல் மிகக் கனமழை வரை கிடைக்கும் சாத்தியமுள்ளது.

​குறிப்பாக, எதிர்வரும் (30.10.2026)ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, கொழும்பு, கேகாலை, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்யக்கூடும். 

குறிப்பாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு மாகாணங்கள் இக்காலப்பகுதியில் மிகக் கனமழையைப் பெறலாம்.

​வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை.!

​ஏற்கனவே மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், (26.10.2026 முதல் 29.10.2026) வரையிலான காலகட்டத்தில் பெய்யக்கூடிய கனமழையானது இம்மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, இம்மாவட்ட மக்கள் இவ்வேளையில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.

​அதேபோல, (24.10.2026 முதல் 30.10.2026) வரையிலான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் என்பதால், இம்மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளின் சில இடங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

​மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.!

​எதிர்வரும் 25.10.2026 முதல் 30.10.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

இது ஒரு புயல் அமைப்பு என்பதால் கடற்கொந்தளிப்பு மிக உயர்வாக இருக்கும். எனவே, மீனவர்கள் எவரும் இக்காலப்பகுதியில் கடலுக்குச் செல்வதைத் முற்றிலுமாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

​இதேவேளை, எதிர்வரும் 23.10.2026 அன்று அரபிக்கடலிலும் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை