மட்டக்களப்பு காந்தி பூங்கா வாகனத் தரிப்பிடத்தில் பரபரப்பு – காரால் மோதிய சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவர் கைது!

மட்டக்களப்பு காந்தி பூங்கா வாகனத் தரிப்பிடத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில், மனைவியின் சகோதரர் மீது காரைச் செலுத்தி மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (18.11.2026) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாகரத்து வழக்கு விசாரணைக்காகச் சென்றுவிட்டு வெளியேறிய கணவன், மனைவிக்கு இடையே வாகனத் தரிப்பிடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கு வந்த மனைவியின் சகோதரருக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்து மோதலாக மாறியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மனைவியின் சகோதரர் மீது கணவர் காரைச் செலுத்தி மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் ஆகிய மூவரையும் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குடும்பப் பிரச்சினைகள் மற்றும் கருத்து முரண்பாடுகள் மோதல்களாக மாறும் சம்பவங்கள் சமூகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்தகைய பிரச்சினைகளைப் பொறுமையுடனும் சட்டரீதியான வழிமுறைகள் ஊடாகவும் தீர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

புதியது பழையவை