மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் முதன்முறையாக உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடியில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (27.11.2026)ஆம் திகதி மாலை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

வீரமறவர்களின் உன்னத தியாகங்களை நினைவுகூர்ந்து நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஆலோசனைக்கு அமைவாக, மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் முதன்முறையாக களுவாஞ்சிகுடியில் இந்நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் வசிகரன், போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ம.கோபிநாத், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர்களான அ.பத்மதேவு, இளமாறன், கேமச்சந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தின் வடக்கு, கிழக்கு பகுதிகள் எங்கும் நேற்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதியது பழையவை