மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் காணப்படும் தொன்மையான வரலாற்றுச் சின்னங்கள் உரிய அங்கீகாரமும் பாதுகாப்பும் இன்றி காணப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
களுவாஞ்சிகுடியின் பூர்வீக வரலாற்றையும் தொன்மையையும் எடுத்துரைக்கும் இந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள் இன்றுவரை ஏன் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை? இவற்றை ஆவணப்படுத்திப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு யாருடையது?
என்ற கேள்விகள் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ஒரு வரலாற்று விடயத்தை ஆய்வு செய்யும்போது அதனை உறுதிப்படுத்துவதற்கான பழமையான ஏட்டுச் சுவடிகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் மற்றும் ஏனைய வரலாற்று ஆவணங்கள் அவசியமாகின்றன.
இத்தகைய ஆதாரங்கள் களுவாஞ்சிகுடியின் வரலாற்றுடன் தொடர்புபட்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நாகர் மரபுடன் தொடர்புபடுத்தப்படும் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் இங்குள்ள நாகக்கல்லும் பிரமாண்டமான செக்குரலும் வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சங்கமன்கண்டி, காரைதீவு, வந்தாறுமூலை, கோவில்குளம் போன்ற இடங்களில் காணப்படும் வரலாற்றுச் சின்னங்களுடன் ஒப்பிடுகையில், களுவாஞ்சிகுடியில் காணப்படும் இந்த நாகக்கல்லும் செக்குரலும் அளவிலும் அமைப்பிலும் தனித்துவம் வாய்ந்தவையாகத் தென்படுகின்றன.
இந்த நாகக்கல்லிலும் செக்குரலிலும் ஏதேனும் எழுத்துக்கள், குறியீடுகள் அல்லது வரலாற்றுச் சான்றுகள் பொறிக்கப்பட்டுள்ளனவா? இந்தப் பிரமாண்டமான கல் மலையைச் செதுக்கி உருவாக்கப்பட்டதா அல்லது வேறு இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டதா?
இதனை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் எது? எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தது?
இதன் உண்மையான பயன்பாடு என்ன?
போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ஆய்வுகள் மூலம் விடை காண வேண்டியுள்ளது.
இவற்றின் வரலாற்றுப் பின்னணி, ஆரம்பகால உரிமையாளர்கள் மற்றும் தொன்மையான சமூக மரபுகள் தொடர்பான உண்மைகளையும் ஆதாரங்களுடன் வெளிக்கொணர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட ஆய்வுகள் முன்னெடுப்பு!
இந்த வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பான முதலாவது ஆய்வு, திருமதி. எழில்வாணி பத்மகுமார்(கலாசாரஉத்தியோகஸ்தர்)முயற்சியினால் பேராசிரியர் மதிப்பிற்குரிய பத்மநாதன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது களுவாஞ்சிகுடியின் தொன்மையான வரலாற்றுடன் தொடர்புடைய ஏட்டுச் சுவடிகள், அமரத்துவமடைந்த தெய்வநாயகம் சங்கரலிங்கம் அவர்களினால் கவனமாக பாதுகாக்கப்பட்ட 18 நூற்றாண்டுக்கு முற்பட்ட ஏட்டு சுவடி உள்ளிட்ட வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, சங்கரலிங்கம் அனோஐன் அவர்களின் முயற்சியுடன் சைவப் புலவரும் சைவப் பண்டிதருமான வொவி Sir அவர்களால் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
களுவாஞ்சிகுடியின் மறைந்துகிடக்கும் தொன்மையான வரலாற்றை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்வதும், வரலாற்றுச் சின்னங்களை உரிய முறையில் அடையாளப்படுத்திப் பாதுகாப்பதும் காலத்தின் கட்டாயமாகும்.
இவை வெறும் கற்களும் பழமையான பொருட்களும் அல்ல; ஒரு பிரதேசத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் வரலாற்று அடையாளங்களை அறிந்துகொள்வதற்கான முக்கிய ஆதாரங்களாக இருக்கக்கூடும்.
களுவாஞ்சிகுடியின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் தொடர்பான ஆய்வுப் பயணம் தொடரும்...