மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவின் பவள விழா சிறப்பாக அனுஸ்டிப்பு

மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு, இந்துக்கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான பவள விழா நிகழ்வு இன்று நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் நல்லையா மாஸ்டரினால் 1946ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பல்வேறு துறைகளிலும் கல்விமான்களை உருவாக்கி மட்டக்களப்பு நகரில் சிறப்பு பெற்றுவருகின்றது.

பல்வேறு சிறப்புமிக்க இந்த பாடசாலையின் 75வது ஆண்டு நிறைவு பவள விழா கொரன அச்சுறுத்தல் காரணமாக மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.சண்டேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி ரவிச்சந்திரா,பழைய மாணவர் சங்க தலைவர் து.மதன்,செயலாளர் மா.சசிகுமார்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தேசியக்கொடி பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு கல்லூரியின் ஸ்தாபகரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்துக்கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான முகப்பு திறந்துவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.










புதியது பழையவை