கோவிட் -19 மரணங்களை அடக்கம் செய்யவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் கூறியதை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானியில் அறிவித்து சட்டமாக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தண்ணீரில் கோவிட் -19 வைரஸ் பரவாது என கோவிட் - 19 தொற்றுக்கு பொறுப்பான ராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தண்ணீரில் வைரஸ் பரவாது என்றால், ஏன் அடக்கம் செய்ய அனுமதியளிப்பதில்லை.
நான் இந்த கேள்வியை கேட்ட போது நாடாளுமன்றத்தில் தனது ஆசனத்தில் இருந்து எழுந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் எனக் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை விஜயம் செய்ய உள்ளமை மற்றும் எதிர்வரும் நாட்களில் ஜெனிவாவில் மனித உரிமை பேரவையில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவே பிரதமர் இந்த பதிலை வழங்கியதாகவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.