இயற்கை நலம் சார்ந்த தமிழர் மருத்துவம்



நாட்டு மக்கள் நோயின்றி வாழ நம் முன்னோர்கள் பெரிதும் முனைப்புக் காட்டினர். அதனை நம் இலக்கியங்களும் கல்வெட்டுகளும் திருக்கோயில்களும் எடுத்து இயம்புகின்றன. பழந்தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துவந்த மருத்துவம் தமிழ் மருத்துவம் என்றே அழைக்கப்பெற்றது. சங்க நூல், மருத்துவன் தாமோதரன், மருத்துவன் நல்லச்சுதன் என்ற புலவர்களின் பெயர்களைக் காட்டுகிறது. பண்டைய நாளில் சித்தர் என்பவர் அறிவர் என்றே வழங்கப்பட்டனர். இலக்கியம் மட்டும் அல்லாது சோழர்கால கல்வெட்டுகளில் மருத்துவமனைகள் "ஆதூரசாலை" என்று அழைக்கப்பெற்றதையும் "சல்லியக்கிரியை" என்ற பெயரால் அறுவை சிகிச்சை நடைபெற்றதையும் குறிப்பிடுகின்றது.

"திருந்திய யாக்கையும் மருத்துவர் ஊட்டிய மருந்துபோல" என்ற வரிகள் கலித்தொகையிலும், "மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்" என்று மூதுரையிலும் மருந்து பற்றிய சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் "ஏலாதி, சிறுபஞ்சமூலம், திரிகடுகம்" என்ற நூல்கள், நூலின் பெயரிலேயே மருத்துவத்தைக் குறிக்கின்றது. இதனை வைத்துப் பார்க்கும்போது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்துறையில் நாம் பெற்ற வளர்ச்சியைக் காண முடிகிறது. "ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு" சேர்ந்த சூரணம் நோயினைத் தீர்ப்பதுபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்கள் பற்றிய கருத்துகளை முன்வைத்து புத்திமதி சொல்வதுபோல் அமைந்த நூல் ஏலாதியாகும்.

திரிகடுகம் என்ற நூலில், "சுக்கு, மிளகு, திப்பிலி" என்ற மூன்றும் உடலில் உள்ள நோயினைத் தீர்ப்பது போல வாழ்க்கைக்குத் தேவையான நல்ல செய்திகளைக் கூறுகிறது.

சிறுபஞ்சமூலம் = சிறுமை + பஞ்ச + மூலம். பஞ்ச என்றால் 5 மூலம் என்றால் வேர் எனப் பொருளாகும். "சிறுமல்லி, பெருமல்லி, சிறுவழுதுணை, கண்டங்கத்திரி, நெருஞ்சி" வேர்கள் எவ்வாறு நோயினைப் போக்குகிறதோ அதுபோல படிப்போர் உள்ளத்தில் உள்ள அறியாமையை இந்நூல் போக்குகிறது என்கிறார் இந்நூலின் ஆசிரியர் காரியாசான்.

            நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்

          மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்

என்கிறது மூதுரை என்னும் தமிழ்நூல்.

திருவள்ளுவர் மருந்திற்கென்றே தனி அதிகாரம் படைத்துள்ளார். நோயற்ற மக்களைக் கொண்ட நாடே உலகில் சிறந்த நாடாகத் திகழ முடியும் என்று,

            உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

          சேராது இயல்வது நாடு

இதன் பொருளாவது, உயிரினை வருந்தக்கூடிய பசியும், ஓயாத நோயும், அழிக்கும் பகையும் இல்லாமல் விளங்குவதே ஒரு சிறந்த நாடாகும் என்கிறார். மற்றொரு குறளில்,

          பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

          அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து

நோயற்ற வாழ்வு, செல்வச் சிறப்பு, குறையாத விளைவு, வற்றாத இன்பம், தகர்க்க இயலாத பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு தருவன ஆகும். இக்குறளிலும் நோயற்ற நிலைக்கே முதலிடம் தந்துள்ளார்.

உடல்நலம் மட்டுமல்ல மனநலமும் நன்கு இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் தம் குறளில் குறிப்பிட்டுள்ளார். அந்த மனக்கவலையினைத் தீர்க்கும் வழிகளையும் வலியுறுத்துவதோடு அல்லாமல் நோயற்ற நிலை வேண்டும். நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள், நோய் வந்தபின் தடுக்கும் வழிமுறைகள் போன்றவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவே மருந்து என்பதை பழந்தமிழ் இலக்கியங்கள் பலபடப் பேசுகின்றன. இதனை வள்ளுவரும் தன் குறளில்,

            மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

          அற்றது போற்றி உணின்

என்று சுட்டிக்காட்டுகிறார்.

பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைத்துப் போற்றப்படும் திருமூலர் திருமந்திரத்தில் பிறப்பு முதல் மனித உடற்கூறு அத்தனையும் படம்பிடித்துக் காட்டுகிறார்.

 ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்

          பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்

          தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்

          ஆண்வச மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே

காதலர் இருவரும் மருவி பொருந்துங்கால் ஆண் ஆகிய வலப்பால் மூச்சு மிகுந்து சென்றால் கருவுற்றுப் பிறக்கும் உயிர் ஆணாகப் பிறக்கும். பெண்ணாகிய இடப்பால் மூச்சு மிகுந்து சென்றால் பிறக்கும் உயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு ஒத்திருந்தால் பிறக்கும் உயிர் திருநங்கையாக-நம்பியாக  இருக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து மிகுதியாக இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்புடன் தரணி ஆளும்.

தமிழ் மருத்துவத்தில் 18 சித்தர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களின் மருத்துவக் குறிப்புகளே செய்யுள் வடிவில் பழந்தமிழ்ச் சுவடிகளாகவும் அதிலிருந்து சில நூல்களாகவும் பதிப்பிக்கப்பெற்று நூல்களாகவும் வெளிவந்து போற்றப்படுகின்றன.

இவை மருத்துவத்தை நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கின்றது. அவை உடல் நலம் பாதுகாத்தல், நோய்த்தடுப்பு, நோய் குணப்படுத்துதல், உடல்நலம் தேறுதல் என்பனவாகும். மேலும், திரிதோஷம் எனப்படும் வாதம், பித்தம், கபம் இவற்றைக் கண்டறிந்து மருத்துவம் செய்தனர். இதைக் கண்டறிவதற்கான நாடியின் வகைகளைத் திருமூலர் உவமையோடு விளக்கியுள்ளார். வாதம் – கோழி நடைபோல நடக்கும் என்றும், பித்தம் – தவளை குதிப்பதுபோலக் குதிக்கும் என்றும், சிலேட்டுமம் – பாம்பு ஊர்ந்து நெளிந்து செல்வதுபோல ஊர்ந்து செல்லும் என்றும் குறிப்பிடுகிறார்.

பழந்தமிழரின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்து இருந்தது. அந்நாளில் போர்க்களங்களில் காயம் பட்டவர்களை மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை செய்தனர். அவ்வாறு செய்வதற்குப் பயன்பட்ட பல வகையான மருந்துகள், அறுவைச் சிகிச்சை செய்வதற்குப் பயன்பட்ட பொருள்கள் போன்றவை இலக்கியங்களிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவ்வாறு 600 வகையான மருந்துகள், 100 வகையான அறுவைச் சிகிச்சை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது. தமிழரின் மருத்துவத்தில் வெல்லூசி எனும் ஊசி பயன்பட்டதைப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது.

அதுமட்டுமின்றி மருத்துவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை,

            அரும்பணி உறுநர்க்கு வேட்டவை கெடாஅது

          மருந்துஆய்ந்து கொடுக்கும் அறவோன்

என்னும் வரிகள் மருத்துவரின் பெருமையைப் பறைசாற்றுகிறது. மேலும், மருத்துவன் நோயின் தன்மையைக் கண்டு நோய்க்கு ஏற்ற மருந்தினை ஆய்ந்து கொடுக்க வேண்டும். அதனால் "மருந்து ஆய்ந்து கொடுப்பவர் அறவோன்" என்று அழைக்கப்பட்டதும் தெரிய வருகிறது.

மேலும் 18 ஆம் நூற்றாண்டில் எழுந்த அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுவர சதகம் என்னும் நூல் ஒரு மருத்துவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அழகாகச் சுட்டுகின்றது.

            தாதுப் பரீக்ஷைவரு காலதே சத்தொடு

                   சரீரலட் சண மறிந்து

          தன்வந்திரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர்

                   தமதுவா கட மறிந்து

          பேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப்

                   பிரயோக மோடு பஸ்பம்

          பிழையாது மண்டூர செந்தூர லக்ஷணம்

                   பேர்பெறுங் குணவா கடம்

          சோதித்து மூலிகா விதநிகண் டுங்கண்டு

                   தூய தைலம் லேகியஞ்

          சொல்பக்கு வங்கண்டு வருரோக நிண்ணயந்

                   தோற்றியே யமிர்த கரமாய்

          ஆதிப் பெருங்கேள்வி யுடையனா யுர்வேத

                   னாகுமெம தருமை மதவே

          ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள

                   ரளப்பளீ சுர தேவனே

இங்கு கூறப்படும் மருத்துவன் இயல்பு பொதுவானதாகும்.

எம்முடைய அருமைத் தேவனே, நாடித்தேர்வையும், காலத்தையும், இடத்தையும் உடலின் இயல்பையும் உணர்ந்து, தன்வந்திரியும், அகத்தியரும், கொங்கணரும், சித்தர்களும் எழுதிய மருத்துவ நூலைக் கற்றுணர்ந்து, பல வகைப்பட்ட பெருமை மிக்க குளிகைகளையும், தூய்மை செய்யும் முறைகளையும், மாத்திரைகளையும், பஸ்பத்தையும், கொடுக்கும் தன்மையையும் தவறாது கற்று, மண்டூரம், செந்தூரம் இவற்றின் இயல்புகளைப் புகழ்பெற்ற பண்புடைய மருத்துவ நூலின் வாயிலாகத் தேர்ந்து, பல வேர் வகைகளின் நிகண்டையும் அறிந்து, தூய எண்ணெயும் இலேகியமும் செய்யும் முறையைச் சொல்லியவாறு அறிந்து, வரும் நோய்களின் முடிவை வெளிப்பட உணர்ந்து, கைநலம் உடையவனாய், முற்காலத்திலிருந்து வழிவழியாக வரும் கேள்வியறிவையும் உடையவனே மருத்துவன் ஆவான் என்கிறது இந்நூல்.

தமிழ் மருத்துவம் என்பது ஒட்டுமொத்த மக்கள் சமூக நலம் சார்ந்து, இயற்கை நலம் சார்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வளர்ச்சியடைந்துள்ளது. அதனை நாமும் போற்றிப் பாதுகாக்க உறுதி கொள்வோம்!

[கட்டுரையாளர் - தமிழ்ப் பண்டிதர்,

புதியது பழையவை