கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும், ஊடகவியலாளருமான செ.நிலாந்தனுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து நடாத்தப்படும் அகிம்சை வழி போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு கிழக்கு மாகாணம் பூராக பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், மக்களின் போராட்டங்கள் தொடர்பான செய்திகள், வீடியோக்களை பதிவு செய்து ஊடகங்கள் மற்றும் முகநூலில் பிரசுரித்து வரும் ஊடகவியலாளர் நிலாந்தனுக்கு அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்றுள்ளார்.
இதனால் நாளைய தினம் (03) பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை நடைபெற உள்ள அகிம்சை வழியில் முன்னெடுக்க உள்ள மக்கள் போராட்ட செய்திகளை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இலங்கையில் மக்கள் போராட்டங்களை தடை செய்யும் அரசாங்கம் அந்த போராட்டங்களை ஊடகங்கள் வாயிலாக உலகறியச் செய்யும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் சட்டத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாகவே கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் நிலாந்தன் மீதான நீதிமன்ற தடை உத்தரவு அமைந்துள்ளது.
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பு.சசிகரனுக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஊடகவியலாளர் நிலாந்தன் மீது அம்பாறை ,திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி நீதி மன்ற தடை உத்தரவை பெற்றுள்ளமையானது கிழக்கு மாகாண மக்களுக்கு எதிரான அநீதிகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களை இலங்கை அரசாங்கம் மிகவும் திட்டமிட்டு அடக்கி,ஒடுக்க முற்படுகிறாதா? என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களை திட்டமிட்டு சட்டத்தின் ஊடாக மேற்கொள்கின்றதா? என்ற சந்தேகங்களை மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீதான பொலிஸாரின் தடை உத்தரவுகள் ஏற்படுத்தியுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.