காத்தான்குடியில் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட கழிவு தேயிலைத்தூள் பொதிகள்..!



மட்டக்களப்பு காத்தான்குடியில் கழிவுதேயிலைதூள் பொதி செய்து விற்பனை செய்யும் தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையை விசேட அதிரடிப்படையினர் நேற்று புதன்கிழமை (17.02.2021) மாலை முற்றுகையிட்டு பல இலட்சம் பெறுமதியான கழிவுதேயிலையை மீட்டுள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள தேயிலைதூள் விற்பனை செய்யும் கடையை சம்பவதினமான நேற்றுமாலை கல்முனை விசேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசேட அதிரடிப்படையினர் கொண்ட குழுவினர் முற்றுகையிட்டனர்.

இதன்போது குறித்த கடையின் பின்பகுதியிலுள்ள தேயிலை செய்யும் தொழிற்சாலை, களஞ்சியசாலையில் பொதி செய்யப்பட்ட தேயிலை தூள்களை சோதனையிட்டபோது அதில் பெருமளவிலான கழிவு தேயிலைகளை கண்டுபிடித்துள்ளனர்.

இதன் பின்னர் களஞ்சியசாலையில் சுமார் 60 கிலோ கிராம் கொண்ட 100க்கு மேற்பட்ட பொதி செய்யப்பட்ட மூடைகளை மீட்டுள்ளதுடன் இந்த களஞ்சியசாலையை பொது சுகாதார அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை