அம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பமாகி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர தலைமையிலான பொலிஸ் குழு நீதிமன்றத் தடையுத்தரவை இன்று (சனிக்கிழமை) மாலை வழங்கியுள்ளது.
அத்துடன், கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையினை அவ்விடத்தில் பொலிஸார் வாசித்துக் காட்டினர்.
இதன்போது, அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை இளைஞர் சேனையின் முன்னாள் தலைவர் தாமோதரம் பிரதீபன், அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் என்.தர்சினி, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் உட்பட பலருக்கு நீதிமன்றத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.