பெரியகல்லாற்றில் சிரமதானப்பனியும் மாயானஅபிவிருத்தி பணிகளும் இடம்பெற்றனர்





கிழக்கில் பெரியகல்லாறு கல்வியால் புகழ் பெற்ற ஒரு பாரம்பரிய கிராமமாகும். இக் கிராமத்தில் உள்ள மயானத்தை கடந்த 6 வருடங்களாக வருடம் தவறாமல் திருமதி மனோண்மணி சந்திரசேகரன் நினைவாக அவர்கள் குடும்பத்தினர் மாபெரும் சிரமதான நிகழ்வை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற் கொண்டு வருகின்றனர். இவ்வருடத்திற்கான சிரமதான பணி புதனன்று (03) முழுநாளும் ஆக்கபூர்வமாக நடைபெற்றது.

தாயின் நினைவாக தனயனும், தாரம் நினைவாக தந்தையும் மிகுந்த பொருட் செலவில் சிரமதானத்துடன் இணைந்ததாக மயான அபிவிருத்தி பணிகளும், பாதையின் இரு மரங்கிலும் பூங்கா அமைக்கும் பணிகளும் பொலிவூட்டும் பணிகளும் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருவது விசேட அம்சமாகும். இதை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக இயங்கிவரும் இ.கோபாலசிங்கத்தின் ஒத்துழைப்பும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில விடுபட்டிருந்த மயான சுற்று மதில் அமைக்கும் பணிகள் குறித்த குடும்பத்தினரால் படிப்படியாக பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது. புனிதம் என்பது தூய்மையிலும் இயற்கை அழகிலும்தான் தங்கியிருக்கின்றது.

மயானம் என்பது புனிதமான ஒரு இடம் என்பதை புலப்படுத்தும் வகையில் சுத்தமாக வைத்திருப்பதிலும் பூங்காவாக அழகு படுத்துவதிலும் அவர்களின் முழுமையான தனித்துவமான பங்களிப்பு உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

தனது மனைவியின் பெயராலும் தாயின் பெயராலும் இத்தகைய ஒரு பொதுப்பணியை தாமாக முன்வந்து தன்னலமற்று இலட்சக் கணக்கில் பணத்தை இறைக்கும் மனப்பக்குவம் என்பது எல்லோருக்கும் இலகுவாக வந்துவிடக் கூடியதொன்றல்ல. கை நிறைய பணம் இருந்தாலும் அதை இழக்க விருப்பமின்றி இறுக்கமாக வைத்து இருப்பவர்கள் இருக்கின்ற இன்றைய உலகில் இப்படியும் ஒரு சிலரையாவது இனம் காண்பது இதயத்தை நிறைக்கவே செய்கின்றது.

இவ்வருடம் நீர்தாங்கி அமைத்து, அதை சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கும் முக்கிய நிகழ்வும் இடம் பெற்றது. மயானத்தில் இரவை பகலாக்கும் மின் இணைப்பும் (மின்குமிழ்கள்) மேற் கொள்ளப்பட்டுள்ளது. மயானத்தின் முன்பக்க மதில் ஓரமாக முழுமையாக மரக்கன்றுகள் நடப்பட்டன. பங்குபற்றிய அதிதிகளால் பூச் சட்டிகளில் மரக் கன்றுகளும் நடப்பட்டன.

மயானம் தூய வெள்ளை நிற மை பூசப்பட்டு, பளிச் என்று காணப்பட்டது. சிலுவைகளும் கல்லறைகளும் மதங்களின் சங்கமத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தன.

நீர் தாங்கியைத் திறந்து வைத்துப் பேசிய ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய தலைவர், மூ.மன்மதராஜா. கொழும்பில் உள்ள பூங்கா ஒன்றில் தான் நிற்பதைப் போன்ற உணர்வில் தற்போது இருப்பதாக அவர் தெரிவித்தார். அத்துடன் தனது வரலாற்று நூலில் குறிப்பிட்டது போன்று கல்லாற்றின் மண்வாசனை கடல் கடந்தும் வீசும் என்ற கனவு இன்று மெய்ப்பட்ட நினைவில் நிற்பதாகவும் உள்ளம் நெகிழ உரைத்தார்.

உண்மையில் அவரது கூற்றை உறுதிப்படுத்துவது போலவே மயானத்திற்குச் செல்லும் 500 மீற்றருக்கும் அதிகமான நீளம் கொண்ட உறவுகள் உறங்கும் இல்லம் வீதியின் இருமருங்கிலும்; திட்டமிட்டு ஏற்கனவே நடப்பட்டிருந்த பூ மரங்கள் பல வர்ணங்களில் பூத்துக் குலுங்குவது முன்னைய சுடுகாட்டுக்குச் செல்லுகின்றோம் என்ற அச்ச உணர்வை அகற்றி அழகிய பூங்கா ஒன்றுள் நுழைவது போன்ற அமைதியையே ஏற்படுத்தும் என்பது உண்மையே.

உறவுகளின் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ளும் உறவுகளின் மன அழுத்தத்தை இந்த மலர்களின் வரவேற்ப நிச்சயம் தணிக்கவே செய்யும். இந்த மயானம் இறந்தவர்களின் சொர்க்க வாசலாகவே வரலாறு பதியும்.

அதேபோல் மயானத்தின் முன்பக்க வெண் மதிலில் கருப்பு மையிளால் ஏழுதப்பட்டுள்ள சிறு. சிறு வசனங்கள் உறவுகளை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு ஆறுதல் அளிக்கவே செய்யும்.

எதிர்காலத்தில் உறவுகள் துயிலும் இல்லம் என்பது மாறி உறவுகள் உறங்கும் பூங்கா என்ற பெயருடன் கிராமத்தின் சுற்றுலா நிலையத்தில் ஒன்றாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்தளவிற்கு இதன் அபிவிருத்திகள் குறித்து தந்தையாலும் தனயனாலும் முன்னெடுக்கப்படும் என்பது எமது நம்பிக்கை. அவ்வாறு மாறும்போது கல்லாற்றின் மண்வாசனை கடல் கடந்தும் வீசவே செய்யும்.

கடல் கடந்து வாழும் இரு உள்ளங்களால் மேம்படுத்தப்பட்டு வரும் உறவுகள் உறங்கும் இல்லம் வெளிநாட்டில் வதியும் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறந்ததோர் முன் உதாரணமாகும். கிராமத்தின் கல்விப் பணிக்கு புலம்பெயரந்தோர் அமைப்பு ரீதியாக உதவுவதையும் கிராமம் மறப்பதற்கில்லை. புதிய சிந்தனைகளுடன் இதுபோன்ற கிராமத்தின் வேறு தேவைகளையும் சுயமாக இனம் கண்டு; பூர்த்தி செய்ய முன்வரும்போத எமது கிராமம் நிச்சயம் எழுச்சிபெறும்.

உண்மையில் மயானத்தை மேம்படுத்தும் பணி மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் பொறுப்பாகும். பெரியகல்லாற்றில் இருந்து கணிசமான வருமானத்தைப் பெறும் குறித்த பிரதேச சபையால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதன் தொழிற் பரப்பில் தனிநபரகளால் அபிவிருத்தி கண்டுள்ள முதலாவது மயானமாகவும் இது நிலை பெறும்.

இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ச.கணேசநாதன், மற்றும் அரசியல் பிரமுகர்கள், அயல் கிராமங்களின் பிரமுகர்கள், இளைஞர், யுவதிகள் என பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை