இந்தியா நடுநிலை வகித்தமை தமிழர்களை வேதனைக்குட்படுத்தியுள்ளது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா நடுநிலை வகித்தமை தமிழர்களை வேதனைக்குட்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் ஆகிய கோவிந்தன் கருணாகரம் தெரிவித்ததுள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அவலுகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத்திற்கோ, நாட்டின் ஒன்றுமைக்கோ எதிரானது அல்ல.இந்த நாட்டினையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் கட்சியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ ஒரு தடைவ மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்து நிலமைகுறித்து பார்வையிடவேண்டும் என்ற வேண்டுகோளையும் இதன்போது முன்வைத்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கைக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமோக வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் 11 நாடுகள் எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மீசையில் மண் ஒட்டவில்லையென்ற வகையில் கருத்துகளை தெரிவித்துவருகின்றார்.22நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் ஏனைய நாடுகள் எதிராகவுள்ளதாக காட்டமுற்படுகின்றார்.
இலங்கை அரசாங்கமும் அவர்களின் அமைச்சர்களும் யாதார்த்ததினை புரிந்துகொள்ளாத நிலையிலேயே செயற்பட்டுவருகின்றனர்.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்ற நிலையில் பல நாடுகளை திரைமறைவிலிருந்து இயக்கிய இந்தியா, இந்த பிரேரணை வெற்றிபெறவேண்டும் இலங்கையில் சிறுபான்மையினத்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

அவர்களுக்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்றுகூறிய இந்தியா இந்த பிரேரணையில் நடுநிலைவகித்தது ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கிய விடயமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.

ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகிய காலம் தொடக்கம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இந்த பிரேரணையை கொண்டுவந்த நாடுகளை கடுமையாக இனவாத ரீதியில் விமர்சனம் செய்துவந்தனர்.ஆனால் இறுதி நேரத்தில் இவர்கள் வாய்கள் அடைக்கப்பட்டு மௌனிகளாக்கப்பட்டார்கள்.

இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐநா மனித உரிமைகள்பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றியவர்கள் இங்குள்ள அமைச்சர்களை அடக்கிவாசிக்குமாறு கூறியதாகவும் அறிகின்றோம்.அந்த பிரேரணையின் கனதியை,அதனை ஆதரிக்கும் நாடுகளின் கனதியை, அடக்கிவாசிக்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் துரதிர்ஸ்டவசமான சம்பவங்களை நிறுத்துவதற்காக குறித்த வேசங்களை கக்கிய அமைச்சர்களை அடக்கிவாசிக்குமாறு கூறப்பட்டதும் அவர்கள் அடக்கிவாசித்ததும் எமக்கு சாதகமானதாகவே இருந்தது.

இன்றுகூட வெளியுறவுத்துறை அமைச்சர் மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் 13வது திருத்தம் தொடர்பாகவும் அதிகார பரவலாக்கல் தொடர்பாகவும் பேசுகின்றார் என்றால் ஐநா தீர்மானத்தின் கனதியின் விளைவே அதுவாகும்.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் முடிந்ததன் பின்னர் சிலவேளைகளில் இந்த அமைச்சர்கள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போன்று செயற்படுவார்கள் என்பது நாங்கள் யாவரும் அறிந்த விடயமாகும்.

இருந்தபோதிலும் இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை இலங்கை புரிந்து நடக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அப்பட்டமான மனித உரிமை மீறலாகவே இருக்கின்றது. ஜனநாயக போராட்டத்தில் பங்குபற்றியவர்களை அச்சுறுத்துவதும்,சட்டத்தின் முன்பாக அவர்களை நிறுத்துவதற்காக பொலிஸ் நிலையங்கள் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிகள்முன்னெடுப்பது எல்லாம் அராஜகமான செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

புதியது பழையவை