மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய சித்திர பாட ஆசிரியர் தேசிய மட்டத்தில் சாதனை.!

உலக சமுத்திர தினம் -2026 சிறப்பிக்கும் முகமாக சுற்றாடல் அமைச்சு, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை இணைந்து நடாத்திய தேசிய மட்ட சித்திரம் வரைதல் மற்றும் புகைப்படக்கலை I போட்டிகளில், கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சித்திர பாட ஆசிரியர் கலைஞர்.ஏ.ஓ.அனல் (விநாயகமூர்த்தி ஜீவராசா) தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள Water Edge Ballroom இல் யூன் மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற  முதலாவது சர்வதேச கடல்சார் சூழல் பாதுகாப்பு மாநாடு மற்றும் சித்திர புகைப்படக் கண்காட்சி நிகழ்வில் இவ்வாசிரியருக்கான சான்றிதழ் மற்றும் பணப்பரிசு என்பன வழங்கி வைக்கப்பட்டது. 

24 வெற்றியாளர்களில் ஒரு தமிழராக வெற்றிபெற்று கிழக்கு மாகாணத்திற்கும், பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும், பாடசாலை சார் சமூகத்திற்கும்  பெருமை சேர்த்துள்ளார். 

2024. 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய மட்ட சித்திர போட்டிகளில், முறையே முதலாமிடம் மற்றும் திறமைச் சான்றிதழ் பெற்ற இவர், இந்த வருடமும் இரண்டாம் இடத்தினைப் பெற்று தொடர் சாதனை படைத்துள்ளார். 

இம்மாநாட்டில் சுற்றாடல் அமைச்சர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பீடாதிபதிகள்,  ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை