துப்பாக்கிகள், ரவைகளுடன் இலங்கைப் படகு இந்தியாவில்




இந்தியக் கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் பெருந்தொகை ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகளுடன் இலங்கைப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டதுடன், ஆறு இலங்கைப் பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டனர்.

‘ரவிஹான்சி என்ற இலங்கை மீன்பிடிக் கப்பல், இந்தியக் கடலோரக் காவல்படையினரால் கேரளாவின் திருவனந்தபுரம் கடற்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் படகு திருவானந்தபுரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சென்னை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் படகை தடுப்புக் காவலில் எடுத்தது.

இந்தப் படகில் 300.323 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள் மற்றும் 9 மில்லி மீற்றர் துப்பாக்கி ரவைகள் ஆயிரம் மற்றும் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள், ஈரானின் சபாஹர் துறைமுகத்திலிருந்து படகு மூலம் ரவிஹான்சி என்ற இலங்கை படகிடம் பறிமாற்றம் செய்யப்பட்டன என ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிவந்தது.

இதேவேளை, கைதானவர்கள் எல்.ஒய் நந்தனா, எச்.கே.ஜி.பி. தஸ்பிரியா, ஏ.எச்.எஸ் குணசேகர, எஸ்.ஏ.செனரத், டி ரணசிங்க, மற்றும் டி நிசங்கா என அடையாளம் காணப்பட்டனர்.
புதியது பழையவை