சுயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கியுள்ள இராட்சத கொள்கலன் கப்பல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் சிக்கியதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3% உயர்ந்துள்ளது.
அதன்படி, பிரிட்டிஷ் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 64.57 அமெரிக்க டொலராக உள்ளது.
அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 60 அமெரிக்க டொலராகவும் 97 சென்ட்டுகளாகவும் உள்ளன
சுயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கி இருக்கும் இராட்சத கொள்கலன் கப்பலால் ஏனைய கப்பல்கள் முன்னேறிச் செல்ல முடியாமல் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ள மிகப்பெரிய கப்பலை உடனடியாக நீக்க முடியவில்லை என்றால் அது இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த கொள்கலன் கப்பல் நான்கு கால்பந்து மைதானங்களுக்கு சமமானதாகும்.
இதன் விளைவாக, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் ஏற்கனவே அதிகரித்து வருவதாகவும், உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
400 மீற்றர் நீளமும் 59 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் செவ்வாயன்று சீனாவிலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாம் துறைமுகத்திற்குச் சென்ற போது சுயஸ் கால்வாயின் இரு கரைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது.
திடீரென அந்த பகுதியில் ஏற்பட்ட காற்று காரணமாக கப்பல் இவ்வாறு சிக்கியுள்ளது.
தைவானின் எவர்க்ரீன் மெரைன் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி. எவர்கிவன் என்ற இந்த கப்பல் சுமார் 20,000 கொள்கலன்களைக் கொண்டுள்ளதுடன், அது சுமார் 200,000 டன் எடை கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.
கால்வாயில் ஏற்பட்ட கப்பல் விபத்து காரணமாக கிட்டத்தட்ட 200 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன, இது கடலில் அண்மையில் ஏற்பட்ட மிகப்பெரிய கப்பல் நெரிசல் என்று கருதப்படுகிறது.
