வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளன.
அவ்வணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சிவராம் தொடர்பான நினைவுரையினை சிரேஷ்ட ஊடகவியலாளர் ந.கபிலநாத் நிகழ்த்தியுள்ளார். நிகழ்வில் வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குறித்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவரது திருவுருவப் படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சிவராம் இல்லாமல் தமிழ்த்தேசிய அரசியல் தரகு அரசியலாகிவிட்டதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஊடகவியலாளர் சிவராமின் படுகொலையானது, ஜனநாயகத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் ஓர் இருண்டநாள். தமிழர் பூகோள அரசியலை அன்றே கணித்து உருவாக்கிய தராக்கி சிவராம் இல்லாமல் தமிழ்த்தேசிய அரசியல் சில்லறை தரகு அரசியல் ஆகிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரும்,பிரபல சமூக சேவையாளரும்,இலக்கியவாதியுமான தராக்கி என்று அழைக்கப்பட்ட டி.சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டு.ஊடக அமையத்தில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நினைவுதினத்தில் முதலில் தராக்கி சிவராமின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, 16 ஈகைச்சுடரேற்றப்பட்டு, மலர் தூவி, இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு, சிவராமிற்கு உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன், மூத்த ஊடகவியலாளர்களான சிவம் பாக்கியநாதன், அ.கங்காதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு சிவராமிற்கு கோவிட் -19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமனர் உறுப்பினர் பா.அரியநேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டிலே வடகிழக்கில் யுத்த காலத்தில் இரண்டு நிருவாக கட்டமைப்புக்கள் அப்போது தோற்றுவிக்கப்பட்டு ஆட்சியமைப்பு நடைபெற்றது. வடகிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப்பகுதி என இரண்டு பகுதிகள் காணப்பட்டது.
இக்காலப்பகுதிகளிலில் தமிழர் தேசமெங்கும்,தமிழ்மக்களுக்கு எதிராகவும் பல்வேறு இன்னல்கள் இடம்பெற்றது. இவ்வாறான உண்மையான சம்பவங்களைத் துணிச்சலுடன், உண்மையாக எழுதி தமிழ்மக்களின் ஏகோபித்த பிரச்சனைகளை உலகறியச் செய்தவர்.
இவர் தமிழ்மொழியில் மாத்திரமன்றி ஆங்கில மொழிகளில் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகைகளில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை துப்புத்துலக்கி எழுதி வந்துள்ளார்.
இவ்வாறு தமிழ்ச்சமூகத்தின்மீது திணிக்கப்பட்ட சம்பவங்களைத் தொடர்ச்சியாக எழுதி கிழக்கு மாகாணத்திலும், வடகிழக்கில் புகழ் பூத்த ஊடகவியலாளராகவும் செயற்பட்டதுடன், மட்டக்களப்பில் பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு இருக்கின்றது.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சரியாக 2005ஆம் ஆண்டு சித்திரை மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் உணவு விடுதியில் கடத்தப்பட்டு மறுநாளான இன்றையதினம் 29 திகதி காலை படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு சிவராம் உட்பட இந்தநாட்டில் 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இன்று சிவராம் படுகொலை செய்யப்பட்டு 16ஆவது ஆண்டில் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்.
இதுவரையும் இந்தநாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான விசாரணையோ அல்லது நீதியோ கிடைக்காமல் அஞ்சலி செலுத்துகின்றோம். இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழர்களின் பிரச்சனை நாட்டுக்கு மட்டுமல்ல உலகிற்கே தெரிந்த விடயமாகும்.
இவ்வாறு உலகறியச்செய்த புகழ் பூத்த ஊடகவியலாளர் சிவராமின் இடத்திற்கு இதுவரையும் எந்தவொரு ஊடகவியலாளரும் உருவாகவில்லை, உருவாக்கப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. தற்போதும் சிவராமின் வெற்றிடம் ஊடகவியலாளர்களால் நிரப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.