மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தமக்கு அறிவிக்குமாறு கூறினார்.


வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே தமது கட்சியின் ஊடாகவும், கட்சிக்கு ஆதரவாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியுள்ளார்கள் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காய்கறி செய்கை விவசாயிகள் சந்திப்பும், உதவி வழங்கும் நிகழ்வும் நேற்று மாங்கேணியில் இடம்பெற்ற நிலையில், அங்கு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் “நான் மட்டக்களப்புக்கு செல்வதாக ஜனாதிபதியிடம் கூறிய போது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தமக்கு அறிவிக்குமாறு கூறினார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வேறு கட்சிகளின் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்களுடைய பிரச்சினைகளை பற்றி பேசுவது கிடையாது. அவர்களுடைய வியாபாரத்தினை மாத்திரம் பேசுகின்றனர்.

இவர்கள் மக்களின் பிரச்சினைகளை பேசாது வேறு பிரச்சினைகளை பேசுவதால் வெளிநாடுகளில் இருந்து பணம் வருகின்றது. நீங்கள் கஷ்டமாக இருந்தால் மாத்திரம் அவர்களுக்கு சந்தோசம். உங்களுக்கு உதவி கிடைத்தால் அவர்களுக்கு பிரச்சினை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபோது தமிழ் மக்களின் நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால் அவர் வந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ் பேசும் மக்களுக்கும் பல உதவிகள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்தார்.

இந்தநிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்தரகாந்தன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா, விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆர்.ஆர்.ஏ,குகான் விஜயகோன், கிழக்கு மாகாண பணிப்பாளர் பி.எம்.என்.தயாரட்ன, நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் திருமதி.ராதிகா ரவி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரன், வாகரை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கணேசன் உட்பட திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஐந்து காய்கறி செய்கை விவசாயிகள் சங்கங்களுக்கு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டதுடன், விவசாயிகள் சங்கத்தினால் அமைச்சருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

புதியது பழையவை