புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W B M A அமரசிங்க மற்றும் பொலிஸ் அதிகாரிகள் நேரடியாக அவர்களுடைய வீடுகளுக்கு சென்று அவர்களுடைய நிலமைகளை பார்வையிட்டு அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரவித்துள்ளார்.
குறித்த பகுதிகளை சேர்ந்த சுமார் 75 குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ்சினுடைய தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் 300 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த 17ஆம் திகதி முதல் முழுமையாக முடக்கப்பட்டு இருந்தன.
அதனை தொடர்ந்து நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டதன் காரணமாகவும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் முடங்கி காணப்படுகிறது. இந்நிலையில் நாளாந்த கூலி தொழிலை நம்பி வாழ்ந்த பல்வேறு குடும்பங்கள் ஒருவேளை உணவுக்கு கூட பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் உள்ளடங்கி இருக்கின்ற புதுக்குடியிருப்பு மேற்கு புதுக்குடியிருப்பு கிழக்கு தேவிபுரம் வள்ளிபுனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாளாந்த உணவுக்காக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்த சில குடும்பங்களுக்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



