மட்டு-போரதீவுப்பற்று பிரதேசசபை 41வது அமர்வு


மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேசசபையின் 41வது அமர்வு நேற்று(23) காலை சுகாதார நடைமுறைகளை பேணியவாறு நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் பிரதேசசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக அமர்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரித்துச்செல்லும் நிலையில் அவற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவேண்டி சுகாதார துறையினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு சபையில் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் கொரனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர்கள்,செயலாளர் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டது தொடர்பில் சபை அமர்வின்போது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

கொரனா அச்சுறுத்தல் காலத்தில் பாதிக்கப்படும் பகுதிகளில் பிரதேசசபை ஊழியர்களுடன் பிரதேசசபை உறுப்பினர்களும் இணைந்து பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் காரணமாக பிரதேசசபை உறுப்பினர்களுக்கும் கொரனா தடுப்பூசி வழங்குமாறு கோரியபோதிலும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மறுப்பு தெரிவித்ததாகவும் இதன்போது உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை,வாகரை போன்ற பிரதேசசபைகளின் உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமது சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமை கவலைக்குரியது என பிரதேசபையின் தவிசாளர் இதன்போது கவலை வெளியிட்டார்.

இதேபோன்று கடந்த மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரனினால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.பிரதேசபை உறுப்பினர் விக்னேஸ்வரன் இதன்போது கண்டனத்தினை பதிவுசெய்தார்.

இன்றைய அமர்வின்போது பல்வேறு விடயங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டதுடன் பல பிரச்சினைக்கான தீர்வுகளும் வழங்கப்பட்டன.
புதியது பழையவை