விடுதலைக்காக போராடியவர்கள் சிறையில்- கொலை குற்றவாளிகளுக்கு 5 வருடங்களே தண்டனை

இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் இன்னும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில் கொலை செய்த குற்றவாளிக்கு 5 வருட சிறைத்தண்டனை போதுமானது என்பது நியாயமா என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, அரசியல் கைதிகள் சிலரின் விடுதலை வரவேற்ககத்தக்கதோர் விடயமாகும்.

ஆனாலும் ஏனைய அரசியல் கைதிகளும் விடுதலையாகும் வரை எங்கள் அழுத்தங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்போம்.
மேலும் வடக்கு- கிழக்கில் அரசியல் கைதிகளின் விடுதலையுடன் சேர்த்து முகநூல்களில் பதிவுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞர்களின் விடுதலைக்காவும் குரல் கொடுக்க வேண்டும்.

இதேவேளை துமிந்த சில்வா போதியளவு சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதாக அமைச்சர் நாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்ததாகச் சொல்லி உயர்நீதிமன்ற நீதியரசர்களினால் தண்டனை வழங்கிய ஒருவர், 5 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானதாக இருந்தால், போராட்ட காலத்தில் ஏதோவொரு அடிப்படையில் கைது செய்து பல வருடங்களாகச் சிறை தண்டனை அனுபவிக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும் ஏன் இதுவரை விடுதலை செய்யவில்லை என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை