முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமை குறித்து அமெரிக்கா அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் டெப்லிஸ் இது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதானவர்கள் விடுதலை செய்யப்படுவதனை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், உச்ச நீதிமன்றினால் 2018ம் ஆண்டு துமிந்த சில்வாவிற்கான தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் துமிந்தவின் விடுதலையானது சட்டம் ஒழுங்கு, குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், அனைவருக்கும் சட்டம் சமம் என்பது போன்றன மலினப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்கள் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி இலக்குகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொசோன் பௌர்ணமியை முன்னிட்டு இன்றைய (24)தினம் 93 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
16 தமிழீழ விடுதலைப் புலிசந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டதுடன், மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவும் விடுதலை செய்யப்பட்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் துமிந்த சில்வாவிற்கு 2016ம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் இந்த தண்டனையை 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.