தற்போதைய நிலையில் முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.இளங்கதிர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகப் பொறுப்பாளாரான நாகராசா பிரதீபராசா பயங்கரவாதத்தை மீளுருவாக்கும் விதமான பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமது கட்சி சார்பில் கண்டனம் வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகப் போராளிகள் கட்சியானது ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் பயணிக்கும் ஒரு கட்சியாகும். அந்தவகையில் நாங்கள் எமது மக்களை ஒரு ஜனநாயக வழிக்குக் கொண்டு வந்து அதற்கூடாக தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வுத் திட்டத்தினைக் கொண்டு வருவதற்காகவே முயற்சித்துக் கொண்டு வருகின்றோம். இதுவே எங்கள் நோக்கமுமாகும்.
இவ்வாறு எமது நோக்கமும், செயற்பாடுகளும் இருக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மௌனத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு ஜனநாயக வழியில் இயங்கும் போராளிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட எமது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிருவாகப் பொறுப்பாளர் தீபன் நேற்றைய தினம் இலங்கையின் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது விடயத்தினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏனெனில் ஜனநாயக வழியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் மீது தேவையற்ற வகையில் கைதுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது. அவற்றை எமது தமிழ் மக்களும், போராளிகளும் நினைவு கூருவது வழமையானதொரு விடயம். அது பயங்கரவாதத்தை வளர்க்கும் செயற்பாடு அல்ல.
படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூருவது எவ்வாறு பயங்கரவாதத்தை வளர்க்கும் செயற்பாடாக அமையும்? அந்தவகையில் அந்த விடயம் தொடர்பில் எமது மட்டக்களப்பு மாவட்ட நிருவாகப் பொறுப்பாளர் முகநூலில் பதிவேற்றிய தரவு தொடர்பாகவும், தலைவர் பிரபாகரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு பதிவேற்றிய தரவு தொடர்பிலும் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூருவதும், தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்வதும் ஒரு பயங்கரவாதச் செயற்பாட்டை மீள உருவாக்கும் என்பது சாத்தியமில்லாததும், முட்டாள் தனமானதுமான ஒரு கருதுகோள்.
எனவே இவ்வாறு சாத்தியமில்லாத விடயங்களை முன்நிறுத்தி எமது முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த நாட்டின் அரசாங்கத்திற்கு நாங்கள் தெளிவாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். தமிழ் மக்கள் மீதும், தமிழ் மக்களுக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்ற முன்னாள் போராளிகளின் அமைப்பான ஜனநாயகப் போராளிகள் கட்சி மீதும் தேவையற்ற கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு மிகப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களைத் தான் உருவாக்கும்.
இந்த விடயங்களை நாங்கள் பன்னாட்டு சமூகத்திற்கு எடுத்துக் கூறியுள்ளோம். அனைத்து நாடுகளின் தூதுவர்களுடனும் பேசியிருக்கின்றோம். சர்வதேச ரீதியாகவும் நாங்கள் இந்த விடயத்தைக் கொண்டு செல்வோம். அதனூடாக இலங்கைக்கு மிகப் பெரிய அழுத்தத்தையும் கொடுப்போம்.
இன்றைய நிலையில் அரசியல் ரீதியில் ஜனநாயக வழியில் செயற்படுகின்ற போராளிகள் மத்தியில் ஒரு பதட்டமான சூழ்நிலை காணப்படுகின்றது. அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது. இதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
அதேநேரத்தில் கைது செய்யப்பட்ட எமது உறுப்பினர் தொடர்பில் எமது செயற்பாட்டாளர்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பேசிய போது அவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கைது செய்யப்பட்ட தீபன் அவர்களது குடும்பமும் மிகவும் பயமுற்று இருக்கின்றது.
எனவே இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினுடைய அனைத்து துறை சார்ந்த செயற்பாட்டாளர்களிடமும் நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளுடைய முன்னாள் போராளிகள் தற்போது முற்று முழுதாக ஜனநாயக வழியிலும், அரசியல் ரீதியாகவும் எமது மக்களுடைய தீர்வை முன்நோக்கி செயற்பட்டு வருகின்றார்களே தவிர எவ்வித மாறுபட்ட செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை.
மாறாக உங்கள் மூலமான இந்த நாட்டில் பயங்கரவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளை முற்றாக நிறுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.