மட்டு-ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆடைத்தொழில்சாலையில் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்று 25-06-2021ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி,கோவில்குளம் ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பணியாற்றி வருகின்ற நிலையில் இவர்களில் இரண்டாம் கட்டமாக 1300பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி அவர்களது ஏற்பாட்டில் 11 சிங்க படைப்பிரிவின் கொமாண்டிங் பிரதானி மஞ்சுள உதயகுமார அவர்களது வழிகாட்டலில், தாழங்குடா இராணுவ முகாமின் கப்டன் அதுகொரளவின் மேற்பார்வையில் குறித்த தடுப்பூசிகள் இராணுவ மருத்துவமனையின் மருத்துவர்கள் ஊடாக ஆடைத்தொழிற்சாலையில் வைத்து ஏற்றப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசிகளை வழங்கிய மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனைக்கு நன்றியினை தெரிவித்ததுடன், குறிப்பாக தங்களது ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றிய பின்னர் அச்சத்தோடு பணியாற்றி வந்த போதும் தற்போது தடுப்பூசி ஏற்றப்படுவது தமக்கு ஒரு ஆறுதலாக இருப்பதாகவும் இச் செயற்பாட்டினால் தங்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகமும் அச்சமற்ற ஒரு நிலைமையில் வாழ வழிவகுக்கும் எனவும் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களையும் இந்த கொரனா தடுப்பூசியைப்பெற்றுக்கொள்ளுமாறு ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.



புதியது பழையவை