மட்டக்களப்பு மாநகர சபையின் கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்ட அமர்வு பல்வேறு காரசாரமான விவாதங்களுடன் இன்று 28-06-2021ஆம் திகதி நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இன்றைய அமர்வின் போது பல்வேறு கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பணிகளின் தாமதங்கள் மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
பல்வேறு வாதப்பிரதிவாதங்களுடன் நடைபெற்ற இன்றைய சபையின் அமர்வின் போது எதிர்க்கட்சிகளிடையே கடுமையான வாய்த்தர்க்கங்களும் இடம்பெற்றன.
குறிப்பாக இன்றைய தினமும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்து ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நஞ்சற்ற உற்பத்திகளை நிறுத்துவதற்கான சேதன பசளை மூலமான உற்பத்தியை அதிகரிப்பதற்கு மாநகரசபையும் ஒத்துழைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இந்த ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் முடிவுறுத்தப்படாமல் இருப்பதன் காரணமாக குறித்த வேலைத்திட்டங்களை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சனசமூக நிலையங்கள் ஊடாக முன்னெடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
வட்டாரங்களில் உள்ள உறுப்பினர்களின் முழுமையான ஆலோசனைகளைப்பெற்று மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டவேளையில் இது தொடர்பில் காரசாரமான கருத்துகளும் பரிமாறப்பட்டன.
சிறுவர் நேய மாநகர திட்டத்தின் கீழ் பெய்லி வீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறுவர் பூங்கா குறித்து தவறான கருத்துகள் பரிமாறப்பட்டுவருவதாக இங்கு குற்றச்சாட்டப்பட்டதுடன் அது தொடர்பில் மாநகர முதல்வரினால் விளக்கமளிக்கப்பட்டது.