நாட்டை திறந்துவிட்டு பொறுப்பின்றி செயற்படும் அரசாங்கம் - சாணக்கியன்


பொது மக்கள் தங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலில் மட்டக்களப்பு - போரதீவுப்பற்று இளைஞர் கழக சம்மேளத்தின் ஏற்பாட்டில் இன்று 28-06-2021ஆம் திகதி காலை மாபெரும் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்த பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் நடத்தப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில தினங்களாக இலங்கையில் பீ.சி.ஆர் எடுக்கும் வீதத்தினை அரசாங்கம் குறைத்துள்ள போதிலும் தொற்றாளர்களின் தொகையும், இறப்பும் அதிகமாகவே இருந்து வருகின்றது.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று இரத்தப்பற்றாக்குறை மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமின்றி முழு இலங்கையிலும் காணப்படுகின்றது.

இரத்தம் வழங்குவதனால் உடம்புக்கு ஒத்துவராது என சிலர் தவறான புரிதல்களுடன் உள்ள போதும் அவ்வாறு இல்லை. அரசாங்கம் பொறுப்பற்ற செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
14000 பீ.சி.ஆர் செய்து அதில் 2000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு 39 பேர் மரணிக்கும் நிலையில் நாட்டை திறந்துவிட்டு இலங்கையில் வாழும் மக்கள் தொடர்பில் அக்கறையின்றி செயற்படுவதை வன்மையாக கண்டிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 



புதியது பழையவை