மட்டக்களப்பில்-எந்தவித ஆலய உற்சவங்களும் விழாக்களும் நடாத்துவதற்கு அனுமதியில்லை


சுகாதார அமைச்சின் தற்போதைய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக எந்தவித ஆலய உற்சவங்களும் விழாக்களும் நடாத்துவதற்கு அனுமதியில்லை.ஆலய நிர்வாகிகள்,பொதுமக்கள் தயவுசெய்து சுகாதார அமைச்சின் சுற்றறிக்கு அமைவாக ஆலய உற்சவங்கள்,விழாக்களை தவிர்த்துக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டமானது நேற்று (27)ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், நோயாளர்களுக்கான இடப்பற்றாக்குறை, வர்த்தக நிலையங்களின் வர்த்தக செயற்பாடுகள், வர்த்தகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் இக் காலகட்டத்தில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது தொடர்பாகவும், அதற்காக அரச நிறுவனங்கள் எவ்வாறான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தெடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கொவிட் செயலணி கூட்டத்தினை தொடர்ந்து விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் நடைபெற்றது.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சுகாதார அமைச்சின் தற்போதைய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக எந்தவித ஆலய உற்சவங்களும் விழாக்களும் நடாத்துவதற்கு அனுமதியில்லை.ஆலய நிர்வாகிகள்,பொதுமக்கள் தயவுசெய்து சுகாதார அமைச்சின் சுற்றறிக்கு அமைவாக ஆலய உற்சவங்கள்,விழாக்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.இந்த நடவடிக்கைகள் சுகாதார அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை மறுபரிசீலனை செய்யப்படும் வரையில் நடைமுறையில் இருக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் மூடுவது குறித்து சில பகுதிகளில் வேறுவேறு நேரங்கள் கடைப்பிடிக்கப்படுவதனால் சில முரண்பாடுகள் தொடர்பில் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு மாலை 09மணி வரையில் சகல வர்த்தக நிலையங்களும் திறக்கமுடியும்.09மணிக்கு பின்பாக திறந்திருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சுகாதார பிரிவினர் நடவடிக்கையெடுப்பார்கள்.

வர்த்தக உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறந்திருக்கும் நேரத்தில் சுகாதார நடைமுறைகளைப்பேணியதாக நுகர்வோரை வர்த்தக நிலையங்களுக்குள் அனுமதிக்கவேண்டும்.அடிப்படை சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தாவிட்டால் வர்த்தக நிலையங்கள் மீது சுகாதார துறையினர் நடவடிக்கையெடுப்பார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 119கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள்.இதுவரையில் 72மரணங்கள் ஏற்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டம் கொரனா அச்சுறுத்தலிலிருந்து முழுமையாக விடுபடவில்லையென்பது தெளிவாக தெரிகின்றது.இதனை உணர்ந்து பொதுமக்களும்,வர்த்தக நிலைய உரிமையாளர்களும் நிலைமையினை புரிந்துகொண்டு சுகாதார நடைமுறைகளைப்பேணி நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
புதியது பழையவை