ஊடகவியலாளர்- நிலாந்தனை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் நிலாந்தனை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு(TID) வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தனை நாளை காலை 11 மணியளவில் கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (11)மதியம் அவரது வீட்டிற்கு சென்ற மாவட்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அழைப்பு கடிதத்தை வழங்கி சென்றுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக ஊடகவியலாளர் நிலாந்தன் மீது தொடர்ச்சியான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த வாக்குமூலம் எது தொடர்பானது என்று அறிவிக்கப்படவில்லை.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து பொலிஸாரால் இவ்வாறான சம்பவங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்வதும் அச்சுறுத்துவதும் தொடர்கின்ற நிலையில் இது ஒரு ஊடக அடக்குமுறை ஒடுக்குமுறை செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.


புதியது பழையவை