திருகோணமலையில் 100 ஏக்கர் நிலத்தில் எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக முனையத்திற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஒப்புதல் கோரியுள்ளது.
ரூ .10 பில்லியனுக்கும் அதிகமான செலவாகும் என மதிப்பிடப்பட்ட உத்தேச திட்டத்தின் மூலம், இது தெற்காசிய பெட்ரோலிய மையமாக மாறும். இதற்கான அறிக்கையை கூட்டுத்தாபனம் சமர்ப்பித்துள்ளது.
லங்கா- இந்திய எண்ணெய் கழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட திருகோணமலையின் 24 எண்ணெய் குதங்களை கையகப்படுத்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் முயற்சித்தது.
எனினும், அதை நிறைவேற்ற முடியாததையடுத்து, புதிய குதங்களை அமைக்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், குழாய் இணைப்புகள், மின் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் கட்டிடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுடன் தலா 10,000 மெட் தொன் திறன் கொண்ட 24 குதங்களை நிர்மாணிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது.
உத்தேச திட்டத்திற்காக இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை குத்தகையின் கீழ் பெற திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக நெருக்கடி ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு நாட்டின்தேவையை பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் சேமிப்பு இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல களஞ்சியங்களின் தற்போதுள்ள சேமிப்புத் திறனை விரிவுபடுத்த முடியாது, எனவே புதிய திட்டம் சிறந்த நடவடிக்கையாக கருதப்படுகிறது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திருகோணமலையில் முன்மொழியப்பட்ட எரிசக்தி மையத்திற்கான திட்டத்தை சர்வதேச சந்தை மதிப்பீட்டின் மூலம் மேற்கொள்ள திறமையான ஆலோசகரின் சேவையைப் பெறுவதற்கு ரூ .30 மில்லியன் பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெற பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கையெடுத்துள்ளது.