மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பணிப்புரை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி புனரமைப்பு தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களின் தலைவர்கள்,வீதி அபிவிருத்தி அதிகாரசபை,வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வீதி அமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் என வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கும் அனைத்து திணைக்கள, நிறுவன பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி புனரமைப்புகள் குறித்து ஆராயப்பட்டது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சுபீட்சத்தின் நோக்கின் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் அதன் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி புனரமைப்பு பணிகளை ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் முன்னெடுக்கவும் அவற்றினை மாவட்ட செயலகத்தின் மூலம் ஆவணப்படுத்தி தொடர்ச்சியான கண்காணிப்புகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.