#Sநாட்டில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த தொடர் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடனான நேற்றைய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு மற்றும் ஊதிய முரண்பாடுகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து நேற்றுமுன்தினம் காலை முதல் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சுகாதார சேவையின் 14 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தன.
இவர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் உட்பட பல சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் சுகாதார அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர்.
அத்துடன், வைத்தியசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட சிகிச்சைகளே வழங்கப்பட்டன. சில வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்குச் செல்லும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி இருந்தனர்.
இந்தநிலையில், தமது கோரிக்கைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று மாலை வழங்கிய எழுத்து மூல உறுதியையடுத்து, பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தைக் கைவிடும் தீர்மானத்துக்கு வந்ததாக சுகாதாரதுறைத் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.