மட்டு- கரடியனாற்றில் மீனவர் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்குடாவெளி நெல் போடியார் கல் பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய சின்னத்தம்பி நடராசா என்ற வயோதிபரே குளத்து நீரில் மூழ்கி மரணித்தவராவார்.

நேற்று (04) மாலை 04.00 மணியளவில் பங்குடாவெளியிலிருந்து புத்தம்புரி குளத்துக்கு மீன்பிடிக்க சென்ற இவர் ஏனைய மீன்பிடியாளர்களும் ஒன்று சேர்ந்த பின்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு வலை வீசி மீன் பிடித்துவர தோணியை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இன்று 05-07-2021ஆம் திகதி காலை குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த செல்வரெட்ணம் தேவஅருள் என்பவர் வயோதிபரான நடராசா என்பவரது தோணி குளத்தில் நிற்பதையும் நடராசாவை காணவில்லையே என்றும் தோணி அருகே சென்ற போது தோணியிலிருந்து விழுந்து நீரில் மூழ்கி நடராசா என்பவர் மரணித்திருப்பதையும் அவரது ஒரு கால் மட்டும் தோணிக்குள் வலையில் சிக்குண்டு இருப்பதையும் அடையாளம் கண்டதும் உடன் அவரது குடும்ப உறவுகளுக்கு விடயத்தை தெரிவித்திருக்கிறார்.

வலிப்பு நோயாளியான இவருக்கு தோணியிலிருக்கும் போதே வலிப்பு ஏற்பட்டதால்தான் குளத்தினுல் விழுந்து மரணித்திருக்கிறார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் கட்டளைக்கமைவாக கரடியனாறு பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
புதியது பழையவை