”தென் சீன கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கோர முடியாது. சர்வதேச தீர்ப்பாயத்துக்கு எதிராக, பிலிப்பைன்ஸ் மீது தாக்குதல் நடத்தினால், எங்கள் ராணுவத்தை களமிறக்குவோம்,” என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஆன்டனி பிளின் கென் எச்சரித்துள்ளார்.
தென்சீன கடல் பரப்பில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த தென் சீன கடல் பகுதி முழுதும் தனக்கு சொந்தம் என, சீனா உரிமை கோரி வருகிறது. இதற்கு, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.தென் சீனக் கடல் எல்லை தொடர்பான வழக்கில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஆதரவாக, சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின் கென் கூறியுள்ளதாவது:
தீர்ப்பு வெளியான நான் காவது ஆண்டில், அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் அரசில் இடம்பெற்றிருந்த வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறிய கருத்தை நாங்கள் ஆமோதிக்கிறோம்.
அப்போது கூறியதுபோல் தென் சீன கடல் முழுதுக்கும் சீனா உரிமை கோர முடியாது.
இந்த விஷயத்தில், பிலிப்பைன்ஸ் மீது சீனா தாக்குதல் நடத்தினாலோ, பிலிப்பைன்ஸ் கப்பல்களை தடுத்து நிறுத்தினாலோ, அமெரிக்கா அதை ஏற்காது. பிலிப்பைன்ஸ் உடன் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி தேவைப்பட்டால், அமெரிக்கா தன் ராணுவத்தை அங்கு அனுப்பி வைக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.