மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 220 கோவிட் தொற்றாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 220 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (14) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 220 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.

இவர்களில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 62 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 35 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 28 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலிருந்து 24பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 22 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மரணமடைந்த நான்கு பேரும் வாகரை, பட்டிப்பளை, வவுணதீவு, ஆரையம்பதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கடந்த ஐந்து நாட்களில் 220, 235, 342, 189, 232 எனத் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒரு வாரத்திற்கு முன்னர் நூறுக்குட்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த வாரம் தொடக்கம் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏழு நாட்களில் 1576கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 145 பேர் மரணமடைந்துள்ளனர்.

20 வயதுக்குட்பட்டவர்கள் எவரும் மரணமடையவில்லை.20-50வயதுக்கு இடைப்பட்டவர்கள் 14பேர் மரணமடைந்துள்ளதுடன், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 131 பேர் மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டினை பொறுத்தவரையில் முதலாவது தடுப்பூசி 2,65,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது தடுப்பூசியானது 60000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85வீதமானவர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டம் 20வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றினை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்குப் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் ஒன்றுகூடல்கள் மூலமே சிறிய சிறிய கொத்தணிகள் உருவாகியது. கோவில்கள், மரண வீடுகள், திருமண வீடுகள் போன்றவற்றுக்குச் சென்று வந்தவர்கள் மூலமே கொத்தணிகள் உருவாகியுள்ளன.

சுகாதார நடைமுறைகளைப் பேணுவதன் மூலமே இந்த பரவலைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார். 
புதியது பழையவை