கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றது.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக மாவட்ட கொவிட் செயலணியின் தீர்மானத்திற்கு அமைவாக இம்முறை கொடியேற்றம் செய்யாமல் அபிசேக ஆராதனைகளுடன் ஆலய நிருவாகம் மற்றும் உபயகாரர்களின் மட்டுப்படுத்தப்பட்டளவிலானோரின் பங்கேற்புடன் வருடாந்த மஹோற்சவம் கடந்த 30.07.2021 ஆந் திகதி முதல் நடைபெற்றுவந்தது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தின் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவம் சிறப்பு பெறுகின்றது.
நேற்று 08.08.2021 காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட யாக பூஜை, மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ஆலய வளாகத்தில் உள்ள மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் குளத்தில் நடைபெற்றது.
இராமபிரான் பிதிர்க்கடன் தீர்த்த இடமாக மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்குளம் உள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன.இவ்வாறு சிறப்புமிக்க ஆலய தீர்த்தோற்சவம் இம்முறை பக்தர்களின் பிரசன்னம் இன்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.