மாகாணங்களுக்கிடையிலான பொதுப்போக்குவரத்து ஆரம்பம்!

மாகாணங்களுக்கிடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகள் இன்று (01)முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பஸ்களில் பயணிகளை அனுமதிக்க சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு மேலதிகமாகப் பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களைக் கண்காணிப்பதற்குப் பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டுள்ளது” – என்றார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான, மாகாணங்களுக்கிடையிலான சகல பஸ்களும் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இன்று முதல் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை தனியார் பஸ்களும் ஆரம்பித்துள்ளன என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஒழுங்கு முறையில், ரயில் சேவைகளும் இன்று முதல் இடம்பெறுகின்றன என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை