எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் சிலர் தங்களை வைத்து பணம் சம்பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
தாங்கள் இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையினை இழந்துள்ளதாகவும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று(06) பகல் மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்றுள்ளது.
இன்றைய ஊடக சந்திப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி, திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் செபஸ்தியான் தேவி, மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் வேலுப்பிள்ளை பொன்மணி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
எங்களது உறவுகளைத் தேடும் போராட்டம் எங்கள் மூச்சு இருக்கும் இறுதிவரையும் தொடரும். எட்டு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் தங்களது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை வழங்கியது புத்தகம் செய்வதற்காகவே.
ஆனால் தாய்மார் வழங்கிய விபரங்களை அவர்கள் மாற்றியமைத்து, அவர்கள் அதனை அரசாங்கத்திற்கு விற்பனை செய்துள்ளார்கள்.
அவர்களை நாங்கள் கண்டிக்கின்றோம். அவர்கள் எலும்புத்துண்டுக்கு சோரம் போனவர்கள். எதிரியை மன்னித்தாலும் துரோகியை நாங்கள் மன்னிக்கமாட்டோம். அவர்களை எங்கள் போராட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.