அதிக கொரோனா மரணங்கள் பதிவாகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்

உலகில் அதிக கொரோனா மரணங்கள் பதிவாகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் வகிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெறும் சர்வாதிகார ஆட்சியே தற்போது முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளுக்கான பிரதான காரணி ஆகும். யுத்தத்தின் போது எடுத்த தீர்மானங்களைப் போன்று இப்போதும் தீர்மானங்களை எடுப்பதன் மூலம் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வரலாற்றில் மிகவும் மோசமான நிலமையில் தற்போது இலங்கை உள்ளது. கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் ஊடகங்களில் பிரச்சாரங்களை செய்து கொண்டிருந்தாலும் உலகில் அதிக கொவிட் மரணங்கள் பதிவாகும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வைத்தியசாலைகளில் கொள்ளளவுகளை மீறி தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளமையால் வீடுகளிலேயே சிகிச்சையளிப்பதாக அரசாங்கம் கூறுகிறது. இதன் காரணமாக இன்று எவ்வித மருத்துவ ஆலோசனைகளும் இன்றி மக்கள் வீடுகளிலேயே உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பொய்யான தரவுகளை வெளியிட்டு அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்திலுள்ளவர்களே சுகாதார அமைச்சு வெளியிடும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

சரியான நேரத்தில் உரிய தீர்மானங்கள் எடுக்கப்படாமையே தற்போது இந்த நிலைமை ஏற்படக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வாதிகார ஆட்சி இடம்பெறுவதே இவை அனைத்திற்கும் பிரதான காரணி என கூறிய அவர், யுத்தத்தின் போது எடுத்த தீர்மானங்களைப் போன்று இப்போதும் தீர்மானங்களை எடுப்பதன் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் அரசாங்கத்தில் காணப்படுகின்ற நிதி நெருக்கடியே நாடு முடக்கப்படாமல் இருப்பதற்கான பிரதான காரணி என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
புதியது பழையவை