மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் நிலைமை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபையில் 29கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் குறித்த சாலை மூடப்பட்டுள்ளது.
இதேபோன்று மட்டக்களப்பில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருவிழாவில் கலந்துகொண்ட அருட்தந்தையர் உட்பட எட்டுப்பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை சாலையில் எட்டு தொற்றாளர்கள் எழுமாதிரியாக இனங்காணப்பட்ட நிலையில் நேற்று சாலையில் கடமையாற்றும் 180பேர் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர்.
இதன்போது 21பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக குறித்த சாலையில் 29பேர் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் குறித்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதில் கடமையாற்றுவோர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதன் தெரிவித்தார்.
இதேபோன்று மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் திருத்தலத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் கலந்துகொண்ட அருட்தந்தையர் உட்பட 08 பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக குறித்த திருவிழாவில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.