திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கோரியுள்ளார்.
ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கு வழங்கும் பயிற்சிகளை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக விடுத்துள்ள அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்தும், பிரித்தானிய அரசாங்கத்திடம் அதையொத்த தீர்மானத்தினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும் வகையிலும் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பொலிஸ் பிரிவுகளுக்கு பயிற்சிகளை வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
இலங்கையின் பொலிஸ் பிரிவுகள் பல்வேறு சமயங்களில் நிகழ்த்திய சித்திரவதைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானசெயற்திட்டம் தயாரித்துள்ளது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கை பொலிஸ் பிரிவுகளின் சித்திரவதைகள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான விடயங்கள் பற்றி ஆதாரங்களுடன் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன.
ஆகவே, இவ்விதமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் இலங்கையின் பொலிஸ் பிரிவுகள் பொறுப்புக்கூறும் வரையில் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானியா நிறுத்தி வைக்க வேண்டும் என்று யஸ்மின் சூக்கா வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.