வவுனியா – பனிச்சங்குளத்தின் குளகட்டில் இருந்த பாரிய மதுரை மரங்களை இரவோடு இரவாக வெட்டி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா கந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளத்தின் குளக்கட்டில் இருந்த பாரிய இரண்டு மதுரை மரங்களை இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு 11 மணியிலிருந்து இன்று அதிகாலை 3 மணி வரை வெட்டி, வெட்டிய குற்றிகளை கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கும் போது குறித்த கிராம மக்கள் காவல்துறை அவசர இலக்கமான 119 இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி சம்பவத்தை கூறிய போது உடனடியாக வருவதாக கூறினர். ஆனால் சம்பவ இடத்திற்கு இதுவரை காவல்துறையினர் வருகை தரவில்லை என கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் இதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பகுதியிலுள்ள கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
