தமிழ் சிறைக்கைதிகளை முழங்காலில் நிற்கவைத்து அவமானப்படுத்தி சர்ச்சைக்குள்ளாக்கிய பிரதிஅமைச்சர் லொகான் ரத்வத்தே மட்டக்களப்பிற்கு அழைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்த செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளரை மிரட்டியுள்ளார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.
அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியற் கைதிகளை முழந்தாலிட வைத்து தலையில் தன்னுடைய கைத்துப்பாக்கியை வைத்து சுடப் போவதாக அச்சுறுத்தியதுடன், அவருடைய சப்பாத்தினை நக்குமாறு மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர் லொகான் ரத்வத்தே.
தமிழ் மக்கள் மனங்களில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்தச் சம்பவம் நடைபெற்று சரியாக 10வது நாளில் தமிழ் மக்கள் பெருமளவாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு லொகான் ரத்தவத்தே அழைக்கப்பட்டதானது மட்டக்களப்பு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக லொகான் ரத்தவத்தே கலந்துகொண்ட அந்த சந்திப்பிற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததும், லொகான் ரத்வத்தையுடன் நடைபெற்ற கலந்துரையாடல் விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததும் பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகியிருந்தது.
இந்த நிலையில் அந்தச் செய்தியை வெளியிட்டதற்காக ஊடகவியலாளரை மிரட்டியுள்ளார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.




