தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகள் மற்றும் பயங்கரவாதிகள் என அழைத்த சம்பவம் தென்னிலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், தனது கவலையையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,
“வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் நேற்று(22) காலை இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டிருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் சில பிரச்சனைகள் தொடர்பில் கூட்டத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கு முயன்ற போது ஆளும் பொதுஜன பெரமுன தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களை விடுதலைப்புலிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் சத்திமிட்டிருந்தனர்.
இதன் காரணமாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தனர்.
இந்த நிலையில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாத்திரம் இந்தக் கருத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நடந்து கொள்வது சிறந்ததல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆகவே இந்த விடயத்தை சபையில் பதிவு செய்ய விரும்புகிறேன்” என்றார்.
