அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையை இலங்கை தமிழரசு கட்சி குழப்பாது எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
இதன்போது, கடந்த 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உரையாடல் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இதில் வடக்கு கிழக்கின் முன்னணிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியும், சிரேஷ்ட தலைவராக சம்பந்தனும் கலந்துகொள்வதை தாம் விரும்புவதாக மனோ கணேசனும், ரவூப் ஹக்கீமும் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும் எனக் கூறியுள்ளார்.

