மாவீரர்களை வணங்குவது தமிழர்களின் கலாசார தார்மீக உரிமை-சிறிதரன் எம்.பி

தமிழ் மக்கள் போற்றும் ஒரு "தலைவனை" பற்றி அரசாங்கத்தின் கைக்கூலிகள் பேசவே அருகதை அற்றவர்கள்!
இவர்களின் ஆதாரமற்ற அறிவிலித்தனமான கருத்துக்களை மக்கள் நன்கறிவார்கள்.

ஒழுக்கத்திலும் கொள்கையிலும் உயர்ந்தவர்கள் என்பதால் தான் விடுதலைப்புலிகள் மற்றையவர்களை விட இன்றும் தமிழ் மக்களிடத்தே உயர்ந்த இடத்தில் நிலைத்திருக்கிறார்கள். 

துயிலும் இல்லம் மேல் சப்பாத்துக்கால்களால்
மிதிக்கும்வரை இங்கு நல்லிணக்கம் ஏற்படாது

நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு

"இறந்துபோன அந்த ஆத்மாக்கள் துயிலும் இல்லங்கள் மேலே நீங்கள் சப்பாத்துக்கால்களால் மிதிக்கும்வரை  இந்த நாட்டில் அமைதி, சமாதானம், நல்லிணக்கம்  ஏற்படப்போவதில்லை.

 நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் உங்கள் இனவாதத்தை முதலில் தூக்கி வெளியே போடுங்கள். எமது மக்கள் இழந்த தமது உறவுகளை  நினைவுகூர  அனுமதி கொடுங்கள்."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சி.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான செலவினத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

"தமிழர்களின் பிரதேசங்களில் யுத்த காலத்தில் தமது உயிர்களைத் தியாகம் செய்த தமது குழந்தைகள், மாவீரர்களை அந்த மக்கள் நினைவுகொண்டு விடுவார்கள் என்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒவ்வொரு மாவீரர் துயிலும் இல்லங்கள் முன்பாகவும் குவிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழர்களின் மனங்களில் கலாசார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்ற தமது வீரப்புதல்வர்களை மறக்கக்கூடியதொரு சூழல் வருமா?  அல்லது சிங்கள மக்கள் இதனை விரும்புகின்றார்களா?

2016, 2017, 2018, 2019களில் கூட, இப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2019இல் ஜனாதிபதியாகப்  பதவியேற்ற பின்னரும் கூட எமது மக்கள் மிகவும் அமைதியாக மாவீரர் தினத்தை அனுஷ்டித்தார்கள். எந்தவிதமான இடைஞ்சலும் இந்த நாட்டில் ஏற்படவில்லை. இங்கே பல அமைச்சர்கள் விழாக்களை நடத்துகின்றார்கள்.

விளையாட்டுப்போட்டிகள் நடக்கின்றன. இதற்கெல்லாம் எந்தக் கொரோனாவும் இல்லை. ஆனால், மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் மட்டும்தான் கொரோனா வருமென அந்த இடங்களில் இராணுவம், பொலிஸாரைக் குவித்து ஒரு அச்சுறுத்தலுடன் யுத்த பிரேதேசங்கள் போன்று இன்று வடக்கும், கிழக்கும் காணப்படுகின்றன.

தயவு செய்து இந்த நிலைகளை மாற்றுங்கள். முதலில் புரிந்துணர்வு வேண்டும், நாட்டில் ஓர் இணக்கப்பாடு வேண்டும் என்றால் மக்கள் மனங்களை வெல்ல வேண்டும்.

தமிழ் மக்களாகிய நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். நாம் எமது பிள்ளைகளை இழந்துள்ளோம். ஆகவே, நாம் எமது பிள்ளைகளை நினைக்கின்ற வணக்க முறைகளை நீங்கள் தடுப்பதன் மூலம் நீங்கள் எதனை அடையப் போகின்றீர்கள். அன்புக்குரிய சிங்கள மக்கள் கூட இதனை எதிர்க்கவில்லையே?

2016, 2017, 2018, 2019ஆம் ஆண்டுகளில் எங்கேயாவது ஒரு சிங்கள பிரதேசத்திலே மாவீரர் தினத்துக்கு எதிராக சிங்கள மக்கள் யாரும்  ஊர்வலம்கூட நடத்தவில்லையே? ஆனால், இந்த. நாட்டிலே அரசியல் தேவைக்காக ஜனாதிபதியிலிருந்து அமைச்சர்கள் வரை தத்தமது அரசியல் தேவைக்கவே இதனை செய்கின்றார்கள் என்ற விடயம் இப்போது தெளிவாகத் தெரிகின்றது. ஆகவே இதிலிருந்து மாறுங்கள்.  

நீதிமன்றக் கட்டளை பிறப்பிக்காமலே பொலிஸார் மாவீரர் நினைவேந்தலுக்கான தடைக் கட்டளைகளைக் கொண்டு வந்து தருகின்றனர்.

 பருத்தித்துறை. சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றங்கள் பொலிஸாரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளன. ஆகவே, நீதிமான் கட்டளை இல்லாமலேயே, நீதிமன்றங்கள் அறிவிக்காமலேயே பொலிஸார் கட்டளைகளை வழங்குகின்றார்கள். கையெழுத்து வாங்குகின்றார்கள். இந்த நாடு மிக மோசமாகவுள்ளது. நாட்டின் நடவடிக்கைகள் பாதகமான சூழலில் போய்க்கொண்டிருக்கின்றது. தயவு செய்து சிந்தியுங்கள். இந்த நாட்டை அமைதிப் பூங்காவாக்க வேண்டும் என்றால் மாவீரர்களை நினைவு கூருவதற்குத் தடையில்லை என்பதனை அறிவியுங்கள்" - என்றார்.
புதியது பழையவை