அநுராதபுரம் மாவட்டம் ஒயாமடுவ மற்றும் சேனாநாயக்க மாவத்தை சேதனப் பசளைப் பொதியிடல் மத்திய நிலையத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷநேரில் சென்று கண்காணித்துள்ளார்.
இதேவேளை, வடமத்திய மாகாணத்தில் 35 நிலையங்களில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் முலம் சேதனப் பசளை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக, நீர் பதுமராகம், சீமைக்கிளுவை, கோழிக்கழிவுகள், காயவைத்த மாட்டுச்சாணம் மற்றும் எப்பாவல ரொக் பொஸ்பேட் என்பன மூலப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்போகத்துக்காக 50,000 மெட்ரிக் தொன் சேதனப் பசளையை உற்பத்தி செய்ய, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது.
மேலும், அநுராதபுரத்தில் ஒயாமடுவ, சேனாநாயக்க மாவத்தை, பதவிய, மஹா இலுப்பல்லம, எப்பாவல மற்றும் தலாவையில் அமைந்துள்ள 06 மத்திய நிலையங்களில் பசளை பொதியிடப்பட்டு, கொமர்ஷல் உர நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றது.
இதேவேளை கொமர்ஷல் உர நிறுவனமானது, கமநலச் சேவைத் திணைக்களத்தின் ஊடாக, விவசாயிகளுக்கு சேதனப் பசளையை விநியோகிக்கின்றது. இந்த சேதனப் பசளையை, ஒரு ஹெக்டெயார் வயல் நிலத்துக்கு ஒரு மெட்ரிக் தொன் அளவில் பயன்படுத்த முடியும்.
இதனையடுத்து, பசளை உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் தரம் பற்றி, பொதியிடல் மத்திய நிலையம் அல்லது உற்பத்தி நிலையங்களின் ஊடாக அறிந்துகொள்ள, விவசாயிகளுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.




