அடிமட்ட மக்கள் வறுமையில் உழல்வதற்கு அதிகாரிகளினதும் அலுவலர்களினதும் அசமந்தப் போக்கு ஒரு காரணம் அமைந்திருப்பதாகப் பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட 247 பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தலைமையில் இன்று இடம்பெற்றது.
நிகழ்வில் விதாதா வள நிலையத்தினால் கிராம சேவகர் பிரிவில் ஒரு முயற்சியாளரை உருவாக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 19 பயனாளிகளுக்கு சுமார் 16 இலட்ச ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் சமுர்த்தி வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 228 பயனாளிகளுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உபகரணத் தொகுதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்,
அரசாங்கத்தால் வழங்கப்பட்டாலோ வேறு அமைப்புக்களால் வழங்கப்பட்டாலோ கிடைக்கும் உதவிகளை அது எதுவானாலும் மக்கள் சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற்றமடைய வேண்டும்.
ஆனால் இதுவரை அளிக்கப்பட்டுள்ள உதவி அதிகமான வேலைத் திட்டங்களின் பலாபலன்கள் சரியான முறையில் சமூகத்திலிருந்து வரவில்லை. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் ஒன்று பயனாளிகளின் அக்கறையின்மை.
அதன் காரணமாக வழங்கப்படும் வாழ்வாதாரத் திட்டங்களால் முழுமையான பயனைப் பெற முடியாது போயுள்ளது.
இருக்கும் அடிமட்ட நிலைமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற சவால் இல்லாததால் தொடர்ந்தும் வறுமையிலேயே உழல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
வறிய மக்களை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதில் பின்னடைவு ஏற்படுவதற்கான முக்கியமான மற்றைய காரணம் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினதும் அலுவலர்களினதும் வழிகாட்டல்கள் மக்களுக்குக் கிடைக்காமை.
அதிகாரிகள் விடயத்தில் நான் அடிக்கடி குறை காணுகின்ற இந்த விடயம் உண்மையானது. தமது கடமையைக் கடமையுணர்வோடும் கண்ணியத்தோடும் செய்யத் தவறும் பட்சத்தில் வறிய மக்களுக்கான விமோசனத் திட்டங்களில் ஒருபோதும் முன்னேற்றம் ஏற்படாது. அதிகாரிகளின் கவனக் குறைவான செயல்பாடுகள் வறிய மக்களின் வாழ்க்கையை மேலும் பாதிக்கும்.
எனவே இந்த விடயங்களில் பயனாளிகளும் கண்காணிப்பாளர்களான அலுவலர்களும் கலவனமெடுத்தால் வறுமையிலிருந்து வாழ்வாதார முன்னேற்றத்தை நோக்கி மக்களைப் பயணிக்க வைப்பது இலகுவாகிவிடும்” என தெரிவித்துள்ளார்.